பிரியமான நாய் முதல் குட்டி நண்பர் வரை... எல்லோருக்கும் எல்லாம் செய்துசென்ற ரத்தன் டாடா!
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, கடந்த அக் 9ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ரத்தன் டாடா திருமணம் ஆகாதவர் என்பதால், அவரின் சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. மேலும் அவரின் மறைவுக்கு பின் டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் அனைவருக்குள்ளும் எழுந்தது. இந்நிலையில்தான் டாடா அறக்கட்டளையின் அடுத்த புதிய தலைவராக ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரத்தன் டாடா எழுதி வைத்த உயில் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. அதுபற்றி இங்கே காணலாம்...
ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட முறையில் சுமார் ரூ 10,000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. மும்பை கொலாபாவில் உள்ள ஹலேகாய் வீடு, டாடா சன்ஸ் நிறுவனத்தில் உள்ள முதலீடுகள், எமரிடஸின் எஸ்டேட் போன்றவை இதில் அடங்கும்.
இவற்றை, தனது சகோதரர் ஜிம்மி டாடா, தனது தாயின் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஆகிய இருவருக்கும் சொத்துகள் கிடைக்கும் படி உயில் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார் ரத்தன் டாடா.
அதுமட்டுமின்றி, தன் தாய் ஆசையாக வளர்த்து வந்த வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு ரத்தன் டாடா முக்கியத்துவம் கொடுத்து உயில் எழுதி வைத்துள்ளார். மேலும் தனது டிட்டோ நாயை தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்றும் அந்த உயிலில் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரத்தன் டாடாவுடன் இருந்த சமையல் உதவியாளர் சுப்பையாவுக்கும் உயில் எழுதியுள்ளார்.
இத்துடன், தனது குட்டி நண்பரான சாந்தனு நாயுடு-க்கு (31 வயது) சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை மட்டும் ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்தன் டாடாவின் குட்ஃபெல்லோஸ் நிறுவனத்தில் சில பங்குகளை சாந்தனுவுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சாந்தனு வெளிநாட்டில் படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அந்தக் கடனையும் ரத்தன் டாடா தள்ளுபடி செய்து விட்டுச் சென்றுள்ளார்.