ரத்தன் டாடா | முதல் நினைவு தினம்..
இந்தியாவின் ரத்தினங்களுள் ஒன்றாக விளங்கிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் முதல் நினைவு தினம் இன்று.
உன் மீது எறியப்படும் கற்களை எடுத்து வைத்துக்கொள்... அதைக்கொண்டு அற்புதங்களை கட்டி எழுப்பு... இது ரத்தன் டாடாவின் பொன்மொழிகள். டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், நாட்டின் மிகவும் மதிக்கப்படும் தொழிலதிபர்களில் ஒருவருமான ரத்தன் டாடா, தொலைநோக்குத் தலைமை, அறம் சார்ந்த வணிக நடைமுறைகள் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றால் இந்தியத் தொழில் துறையில் நீங்கா முத்திரையை பதித்துச் சென்றுள்ளார்.
சரியான முடிவை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை... நான் முடிவை எடுத்த பிறகு அதை சரியாக்குவேன்.. இந்த பொன்மொழியையும் இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைத்தவர் ரத்தன் டாடா. அவர் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னரும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்து, எண்ணற்ற இளம் தொழில்முனைவோருக்கு வழிகாட்டியவர் ரத்தன் டாடா. சிறிய விலங்குகளுக்காக இந்தியாவில் முதல் மருத்துவமனையை நிறுவிய பெருமை இவரையே சாரும்.
டாடா குழுமத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில், ரத்தன் டாடாவின் புன்னகை பூத்த புகைப்படம் பகிரப்பட்டு, தலைமுறைகளை வடிவமைத்த ஒரு வாழ்க்கை. இன்று, எங்கள் தலைவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது. ரத்தன் டாடா மறைந்து ஓராண்டு ஆன நிலையில், அரசியல் தலைவர்கள், தொழில்துறையினர், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் சமூக ஊடகங்களில் அவருக்கு உணர்வுப்பூர்வமான அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.
வேகமாக செல்ல தனியாகவும், தூரமாக செல்ல இணைந்தும் பயணிக்கவும்... இதுவும் அவரின் அறிவுரைகள்... நிறுவனத்தின் நலனை கடந்து, சமூகத்தின் பயன் சார்ந்து வணிகம் இருக்க வேண்டும்...இதுதான் அவர் இந்திய தொழில்துறையினருக்கு வகுத்து கொடுத்துள்ள புதிய இலக்கணம்... ரத்தன் டாடா மறைந்தாலும், அவரின் செயல்பாடுகள் சிறந்த தேசத்தை கட்டி எழுப்ப வழிகாட்டியாக திகழ்கிறது.