rat
ratpt web

ஹோட்டல் சிக்கன் கிரேவியில் இருந்த இறந்த எலி..!

ஆர்டர் செய்த சிக்கன் கிரேவியில் இறந்த எலி கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களாக உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும் அதில் இறந்த உயிரினங்கள், பிற பொருட்கள் போன்றவை இருப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

தமிழ்நாட்டில் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி பல்வேறு உணவகங்களில் சோதனைகளில் ஈடுபட்டு கெட்டுப்போன இறைச்சிகளை கண்டறிந்து அழித்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையிலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அனுராக் சிங் என்பவரும் அவரது நண்பர் அமீன் என்பவரும் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள பஞ்சாபி உணவகம் ஒன்றிற்கு கடந்த ஞாயிறன்று இரவு சாப்பிட சென்றுள்ளனர்.

அங்கு மட்டன் மற்றும் சிக்கன் சம்பந்தப்பட்ட உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். உணவு வந்ததும் அனுராக் சிங் சிக்கனை சாப்பிட்டிருக்கிறார். அந்த இறைச்சியை சாப்பிட்ட போது அது கோழியின் இறைச்சிதானா என்பதில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை அவர் சோதித்த போது அதில் இறந்த எலியொன்று கிடந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து உணவகத்தின் மேலாளரான விவியன் ஆல்பர்ட்டை அழைத்து அது குறித்து கேட்டபோது அவர் சரியான பதில் வழங்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனை விரைந்த அவர்கள், உரிய சிகிச்சைக்குப்பின் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் உணவில் கலப்படம், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் உணவக மேலாளர், உணவக சமையல்காரர், உணவை பரிமாறியவர் என மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை அறிந்த மகாராஷ்ட்ரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), உணவின் மாதிரியை எடுத்து வருவதற்காக அதிகாரியை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com