'ராஷ்ட்ரபத்தினி' சர்ச்சை: கடும் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்! திங்கள் வரை ஒத்திவைப்பு!

'ராஷ்ட்ரபத்தினி' சர்ச்சை: கடும் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்! திங்கள் வரை ஒத்திவைப்பு!
'ராஷ்ட்ரபத்தினி' சர்ச்சை: கடும் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்! திங்கள் வரை ஒத்திவைப்பு!

அதிர் ரஞ்சன் சௌதுரியின் "ராஷ்ட்ரபத்தினி" சர்ச்சையால் நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி - எதிர்க்கட்சிகள் மோதல் வெள்ளிக்கிழமையான இன்று மேலும் தீவிரமடைந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையை முழுமையாக முடக்கியது. ஒரு மசோதாவைக் கூட பரிசீலனைக்கு எடுக்க முடியாத சூழலில் இரண்டு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும் தனிநபர் மசோதாக்கள் கூட பரிசீலனைக்கு வரவில்லை என்கிற அளவுக்கு கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

மக்களவை வெள்ளிக்கிழமை காலையில் கூடியதும் அதிர் ரஞ்சன் சௌதுரி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கம் போல பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினர். அவைத்தலைவர் இருக்கையை முற்றுகை இடவும் இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தயங்கவில்லை. இந்நிலையில் இரண்டு அவைகளும் முதலில் 12 மணி வரையும் பின்னர் நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.

அதிர் ரஞ்சன் சௌதுரி குடியரசு தலைவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், அவரை நேரில் சந்திக்க காத்திருப்பதாகவும் தெரிவித்தார். திரௌபதி முர்மூவை சந்தித்து சர்ச்சையை விளக்க உள்ளதாகவும், தான் வேண்டுமென்றே சர்ச்சையான வார்த்தையை பேசவில்லை எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார். தான் குடியரசு தலைவரிடம் மன்னிப்பு கேட்க தயார் என்றும், பாரதிய ஜனதா தலைவர்களிடம் மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்றும் அதிர் ரஞ்சன் சௌதுரி விளக்கி வருகிறார்.

இதற்கிடையே ஸ்மிருதி இரானி இன்று குடியரசு தலைவரை சந்தித்தார். குடியரசு தலைவர் இல்லம் சென்று திரௌபதி முர்மூவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோலவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குடியரசு தலைவரை சந்தித்தார். உள்துறை அமைச்சர் மரியாதையை நிமித்தமாக குடியரசு தலைவரை சந்தித்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் திட்டமிட்டு குறிவைத்ததாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதிர் ரஞ்சன் சௌதுரி சர்ச்சையில் காரணமே இல்லாமல் சோனியா காந்தி சிக்க வைக்க முயற்சி நடப்பதால் மோதல் அதிகரித்துள்ளது என அவர்கள் விளக்கினர்.

இந்த கூட்டத்தொடரில் 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதும் எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. வியாழக்கிழமை 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மக்களவை உறுப்பினர்கள் நால்வர் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் சேர்த்து, இந்தக் கூட்டத் தொடரில் இதுவரை 27 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுசில் குப்தா மற்றும் சந்திப் பாத்தக் விதிகளை மீறி பதாகைகளை ஏந்தி முழக்கமிடுவதாக அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வியாழக்கிழமையன்று எச்சரித்தார். சுயேச்சை உறுப்பினர் அஜித் குமார் புயான் பெயரும் அவை விதிகளை மீறுவோர் பட்டியலில் குறிப்பிடப்பட்டது. பின்னர் மூவரையும் விதி எண் 256 அடிப்படையில் இந்த வாரம் முழுவதற்கும் இடை நீக்கம் செய்வதாக அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். புதன்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் இதே விதியின் அடிப்படையில் இடைநீக்கம் செய்யப்பட்டார். செவ்வாய்க்கிழமை ஆவணங்களை கிழித்து அவை தலைவர் இருக்கையை நோக்கி வீசியதாக குற்றம் சாட்டி அவரை ஹரிவன்ஷ் இடைநீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று 19 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதே விதியின் அடிப்படையில் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் திமுகவைச் சேர்ந்த சண்முகம், கனிமொழி, என் வி என் சோமு, என் ஆர் இளங்கோ, கிரிராஜன், கல்யாணசுந்தரம் மற்றும் அப்துல்லா ஆகியோரும் அடக்கம். இதைத் தவிர திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏழு உறுப்பினர்கள், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் இவர்களுடன் சேர்த்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாட்களாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மோதல் சூழலில், நாடாளுமன்றம் இந்த வாரம் முழுவதும் பெரும்பாலும் முடங்கியே இருந்தது. கடும் அமளிக்கிடையேயும், ஒரு சில மசோதாக்கள் மட்டுமே விவாதத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com