மத்தியப் பிரதேசம் | 4 கை, 4 கால்களுடன் பிறந்த குழந்தை.. சிறப்பு சிகிச்சைக்கு அனுப்ப திட்டம்!!
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் லவ்குஷ்நகரில் உள்ள சமூக சுகாதார மையத்தில் 4 கைகள் மற்றும் 4 கால்களுடன் அரிதான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. நேற்று, 29-வயது ஒரு பெண்ணுக்கு பிறந்த இந்த குழந்தையின் கூடுதல் கைகள், கால்கள் தொர்பான விவரங்களை அறிந்து, சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆச்சரித்துடன் சுகாதார மையத்தில் திரண்டனர். இது ஒரு அரிதான 'ஹெட்டோரோபேகஸ் கன்ஜெனிட்டல் டிஃபெக்ட்' அல்லது 'பாராசிடிக் டுவின்னிங்' குறைபாடாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். தாயின் கருவில் இரட்டை குழந்தைகள் வளரும் போது, அதில் ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சி அடையாமல், சீராக வளர்ந்து வரும் மற்றொரு குழந்தையுடன் ஒட்டிக்கொள்ளும் நிலையில் இது போன்ற அரிய பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தாயும் சேயும் லவ்குஷ்நகர் மையத்தில் முதற்கட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கூடுதல் உடல் உறுப்புகள் உள் உறுப்புகளுடன் எவ்வாறு இணைந்துள்ளன என்பதையும், குழந்தையின் ரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலத்தை ஆய்வு செய்யவும் சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் அவசியமாகின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தாய் மற்றும் புதிதாக பிறந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காகவும், சிறப்பு மருத்துவ வல்லுநர்களின் பரிசோதனைக்காகவும் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஜபல்பூருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
