'பெண்களின் உடை தான் பாலியல் வன்கொடுமை அதிகரிக்க காரணம்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

'பெண்களின் உடை தான் பாலியல் வன்கொடுமை அதிகரிக்க காரணம்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
'பெண்களின் உடை தான் பாலியல் வன்கொடுமை அதிகரிக்க காரணம்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

பெண்களின் உடை தான் பாலியல் வன்கொடுமை அதிகரிக்க காரணம் என கர்நாடகா பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரிகளில் ஒருதரப்பு மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பெண்ணியவாதிகள் என அனைத்து தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்துகளையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களின் உடையை மையப்படுத்தி அரசியல் செய்யக் கூடாது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

இதனிடையே, ஹிஜாப் எதிர்ப்பு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், "ஹிஜாப், ஜீன்ஸ், கூன்ஹட், பிகினி என எந்த உடையாக இருந்தாலும் அவற்றில் எதை அணிய வேண்டும் என்பது பெண்ணின் உரிமை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அந்த உரிமையை உறுதி செய்கிறது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடகா பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "பிகினி என்ற வார்த்தையை பயன்படுத்துவது மிகவும் கீழ்த்தரமானதாக நான் கருதுகிறேன். கல்லூரியில் பயிலும் போது, பெண்கள் தங்களின் உடலை முழுவதும் மறைக்கும் படியான உடைகளை தான் உடுத்த வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், பெண்களின் உடை தான் ஆண்களின் உணர்ச்சியை தூண்டி பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது. இது சரியானது அல்ல. நம் நாட்டில் பெண்களுக்கென ஒரு மரியாதை இருக்கிறது" என அவர் கூறியுள்ளார். பெண்களின் உடை குறித்த பாஜக எம்எல்ஏவின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com