“7 வருட சம்பவம் குழந்தைக்கு ஞாபகம் இருக்குமா?” - பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடும் தாய்  

“7 வருட சம்பவம் குழந்தைக்கு ஞாபகம் இருக்குமா?” - பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடும் தாய்  
“7 வருட சம்பவம் குழந்தைக்கு ஞாபகம் இருக்குமா?” - பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடும் தாய்  

7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் பள்ளி ஒன்றில் 7 வயது சிறுமி ஒருவர் கடந்த 2012ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்தச் சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அச்சிறுமியின் தாய் பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார். எனினும் இந்தப் புகாரை பள்ளி முதல்வர் நிராகரித்துள்ளார்.

இதற்குப் பின் அச்சிறுமியின் தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் பள்ளியில் பிளம்பராக பணியாற்றியவர் ஒருவர் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

இந்த வழக்கில் நடைபெற்ற வாதங்கள் குறித்தும் அச்சிறுமியின் தாயின் பேட்டியை ‘த நியூஸ்மினிட்’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் சார்பில் கர்நாடகாவிலுள்ள மூத்த குற்றவியில் வழக்கறிஞர் ஆஜாராகி வாதாடியுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது குழந்தை கற்பனையாக சில விஷயங்களை தெரிவிக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்ட நபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறும் நாளில் பிளம்பர் மதுசூதனன் விடுமுறையில் இருந்ததாக பள்ளியின் வருகை பதிவேடு தெரிவிக்கிறது என்றும் வாதாடப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்கு மறந்துவிட்டதாக கூறி அச்சிறுமி பலவற்றிற்கு பதிலளிக்கவில்லை. 

இந்த வழக்கை விசாரித்த திருமலா செட்டிஹல்லி காவல்துறையினர் ‘த நியூஸ்மினிட்’ தளத்திற்கு பேட்டியளித்துள்ளனர். அதில், “பிளம்பர் மதுசூதனன் பள்ளிக்கு விடுமுறை இட்ட நாட்களிலும் பள்ளியில்தான் இருப்பார் என்று பள்ளியின் காவலாளி தெரிவித்துள்ளார். அத்துடன் பள்ளியின் வருகை பதிவேடு எப்படி இந்த வழக்கில் ஆதாரமாக இருக்கும். மேலும் இந்தப் பள்ளி தரப்பில் குழந்தை பொய் சொல்வதாக பலமுறை விசாரணையின் போது தெரிவித்தனர். நாங்கள் பலமுறை மருத்துவ பரிசோதனை அறிக்கையை கேட்டு பெங்களூரு தடயவியல் துறைக்கு கடிதம் எழுதினோம். எனினும் அவர்கள் தராததால் எங்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தனர். 

இந்த வழக்கு குறித்து குழந்தை தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.டி.வெங்கடேஷ்,“காவல்துறை தரப்பில் மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அத்துடன் குழந்தையை கழிவறைக்கு பிளம்பர் கூட்டி செல்லும் போது பார்த்து கொண்டிருந்த ஆசிரியரை குற்றவாளியாக சேர்க்காது ஏன்? அத்துடன் பள்ளியின் முதல்வரை குற்றவாளியாக சேர்க்காதது ஏன்?” எனப் பல கேள்விகளை எழுப்பினார். 

இறுதியாக இதுகுறித்து அச்சிறுமியின் தாய், “பிளம்பராக வேலை செய்யும் நபர் எவ்வாறு சிறந்த குற்றவியல் வழக்கறிஞருக்கு சம்பளம் கொடுக்க முடியும்? அந்த வழக்கறிஞருக்கு பள்ளிதான் சம்பளம் அளித்திருக்கவேண்டும். 7 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தை குழந்தை எவ்வாறு சரியாக இன்னும் ஞாபகம் வைத்திருக்கும். எனது குழந்தை இந்த வழக்கில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் நிறைய அவமானங்களை சந்தித்தோம். இதனால்தான் இதுபோன்ற வழக்குகளில் பலர் பாதியில் போராடாமல் விட்டு விடுகின்றனர். ஆனால் நான் இதை விடமாட்டேன். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போது போக்சோ சட்டம் நிறைவேற்ற படாததால் இந்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com