இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம்: மீண்டும் அட்டூழியம்
ஓடும் காரில் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே மீண்டும் நடந்த இந்தச் சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சிக்கிமைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். டெல்லி குர்கான் பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை டெல்லி கானாட்பிளேஸ் பகுதியில் உள்ள சாஹ்தாராவில் வசிக்கும் தனது ஆண் நண்பரை பார்க்கச் சென்றார். அவருடன் சினிமா பார்த்துவிட்டு இரவு பத்துமணிக்கு மேல், இருவரும் மது அருந்தினர். பின்னர் டின்னரை முடித்துவிட்டு, வாடகைக் காரில் தனியாக குர்கான் சென்றார். அதிகாலை 2 மணிக்கு காரில் இருந்து இறங்கிய அவர், வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்ற 3 பேர் அவரை இழுத்து, தங்களது ஸ்விப்ட் டிசையர் காருக்குள் தள்ளினர். கார் ஓடத் தொடங்கியது. மூன்று பேரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அப்போது அந்தப் பெண் கண்ணீர் மல்க கெஞ்சியதை அடுத்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ரோட்டில் அவரை தள்ளிவிட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
பைக்கில் சென்ற ஒருவர் உதவியால் நஜாபஹர் சுங்க சாவடிக்கு வந்த அந்தப் பெண், அங்கிருந்து டெல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இது போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

