சசிகலா சமையலறை விவகாரம்: ரூபாவுக்கு டி.ஜி.பி நோட்டீஸ்!

சசிகலா சமையலறை விவகாரம்: ரூபாவுக்கு டி.ஜி.பி நோட்டீஸ்!
சசிகலா சமையலறை விவகாரம்: ரூபாவுக்கு டி.ஜி.பி நோட்டீஸ்!

பெங்களூரு சிறை முறைகேடுகள் தொடர்பாக பரபரப்பு புகார் கூறிய டி.ஐ.ஜி. ரூபாவுக்கு சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு அங்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி இருப்பதாகவும் டி.ஐ.ஜி. ரூபா புகார் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந் நிலையில் கட்டாய விடுமுறையில் உள்ள சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், டிஐஜி ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது சார்பில் வக்கீல் ஆர்.ரமேஷ் என்பவர் இந்த நோட்டீசை அனுப்பி இருக்கிறார்.  அதில், ’சத்திய நாராயண ராவுக்கு எதிரான தவறான தகவல்களை வெளியிட்டு அவர் பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். அவர் வருகிற 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவர் போலீஸ் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒழுக்கத்துடன் பணியாற்றியுள்ளார். எனது கட்சிக்காரர் சிறந்த சேவைக்காக ஜனாதிபதி பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். அவருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறி
உள்ளீர்கள். அந்த பணம் யார் கொடுத்தது, எங்கிருந்து வந்தது என்பது போன்ற வி‌ஷயங்கள் குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறையில் எனது கட்சிக்காரர் புகார் செய்ய உள்ளார். ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் தாங்கள் சில நோக்கத்திற்காக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளீர்கள். தாங்கள் மன்னிப்பு கேட்பதால் எனது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட களங்கம் நீங்கிவிடாது. ஆயினும் 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com