ராமர் சேது பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது: மீண்டும் சூடுபிடிக்கும் சர்ச்சை!
இந்தியா இலங்கையை இணைக்கும் வகையில் கடலில் இருக்கும் ராமர் சேது பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதை அடுத்து ராமர் சேது சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக்கூடிய அறிவியல் தொடர்பான தொலைக்காட்சி ஒன்று, ராமர் சேது பாலம் இயற்கையானது அல்ல, அது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற ஆய்வு முடிவை நிகழ்ச்சி முன்னோட்டமாக வெளியிட்டது. விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதே பாஜகவின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார். இதே கருத்தை மற்றொரு மத்திய அமைச்சரான ரவி சங்கர் பிரசாத்தும் தெரிவித்துள்ளார். மேலும், சேது பாலம் இயற்கையான மணல் திட்டு என உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த காங்கிரஸ் இதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். இதனால் ராமர் சேது பால விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.