கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை: சாமியார் ராம் ரஹீம் மீதான வழக்குகள்

கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை: சாமியார் ராம் ரஹீம் மீதான வழக்குகள்
கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை: சாமியார் ராம் ரஹீம் மீதான வழக்குகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங், இதற்கு முன்னதாக கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.

ஹரியானா மாநிலத்தின் சிர்சாவில் உள்ள தேரா சச்சா ஆசிரமத்தில் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங், மர்மமான முறையில் 2002 ஜூலையில் கொல்லப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக 2 பெண்கள் அளித்த புகார் குறித்த விவரங்களையும், ஆசிரம நடவடிக்கைகளையும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு ரஞ்சித் சிங் தெரிவித்து வந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ராம் ரஹீமின் ஆசிரம மர்மங்கள் குறித்து எழுதிய பத்திரிகையாளர் சந்திர சத்ரபதி, 2002 அக்டோபரில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் இந்தக் கொலையை செய்ததாக கூறப்பட்டது. 2005 ஆம் ஆண்டு, ஆசிரமத்தில் பஜனையில் பங்கேற்ற தனது மனைவி குட்டி தேவி கடத்தப்பட்டதாக கமலேஷ் குமார் என்பவர் காவல்துறையில் புகார் செய்தார். அப்போதும் பல பிரிவுகளில் ராம் ரஹீம் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2007 ஆம் ஆண்டு சீக்கியர்களின் மதகுருவான குரு கோவிந்த ‌சிங் போல ராம் ரஹீம் உடையணிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது ரஹீமின் சீடர்களுக்கும், சீக்கியர்களுக்கும் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 2012 ஆம் ஆண்டில் ஆசிரமத்தில் 400 ஆண்களுக்கு ராம் ரஹீமின் உத்தரவின்பேரில் விதை நீக்கம் செய்யப்பட்டதாக ஹன்ஸ்ராஜ் சவுகான் என்ற முன்னாள் சீடர் புகார் தெரிவித்தார். விதை நீக்கம் செய்தால் கடவுளை உணரலாம் என ராம் ரஹீம் சொல்லி, இந்தக் கொடுமையை அரங்கேற்றியதாக அவர் கூறியிருந்தார். அந்த புகாரின் மீது 2014 ஆம் ஆண்டு ராம் ரஹீம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

தேரா சச்சா ஆசிரமத்தில் சட்டவிரோத ஆயுதப் பயிற்சி நடைபெறுவதாக 2014 ஆம் ஆண்டில் புகார் கிளம்பியதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் ராம் ரஹீம் நடித்து வெளியான மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்சார் ஃபோர்டு உறுப்பினர் லீலா சாம்சன் ராஜினாமா செய்தார். இவ்வாறு சர்ச்சை சாமியாராக வலம் வந்த ராம் ரஹீம் சிங்க்கு தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் வீதம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com