ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவு
பிபின் ராவத் உள்பட 13 பேர் மறைவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. விமானப்படை தளபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சூலூரில் காலை 11.48-க்கு புறப்பட்ட ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு மதியம் 12.08-க்கு துண்டிக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் பயணம்செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உடல்கள் இன்று மாலை டெல்லி எடுத்துவரப்பட உள்ளன. பிபின் ராவத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்படும். இந்த விபத்து தொடர்பாக முப்படைகளின் விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது. ஏர்மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.