பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுப்போம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் வீரர்கள் ஒரே நாளில் 78 வாகனங்களில் மொத்தமாக சென்றனர்.
ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தற்கொலை படை தீவிரவாதி , வெடிகுண்டு நிரப்பிய காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஒன்றை குறிவைத்து மோதினான். இதில் குண்டு வெடித்து பஸ் முற்றிலும் உருக்குலைந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறி விழுந்தனர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். 20 வீரர்கள் படு காயமடைந்துள்ளனர். அவர்ர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘’ பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் நாடே ஒன்றிணைந்துள்ளது. நமது பொறுப்புகளை உணர்ந்துள்ளோம். தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என உறுதி அளிக்கிறேன். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வரை ஓயமாட்டோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் காரணமாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகாரில் இன்று பங்கேற்கவிருந்த அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக அவர் இன்று ஸ்ரீநகர் விரைகிறார்.