5ஆம் தலைமுறை போர் விமான தயாரிப்பு.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
இந்தியாவிலேயே அதிநவீன போர் விமானங்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் இலக்கை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ADVANCED MEDIUM COMBAT PROGRAMME என்ற திட்டத்தின் செயல்பாட்டு கட்ட திட்டத்திற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார். மிதமான எடை கொண்ட எதிரி நிலப்பகுதியில் ஊடுருவி தாக்கும் திறன் கொண்ட போர் விமானங்களை உருவாக்குவது மூலம் இத்திறனை பெற்றுள்ள மிகச்சில நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். இந்த 5ஆம் தலைமுறை விமானங்கள் எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் சென்று தாக்குதல் நடத்தும் திறன் பெற்றவையாகும். இவற்றை இணைப்பது மூலம் இந்திய படைகளின் வலிமை வெகுவாக அதிகரிக்கும் எனக்கருதப்படுகிறது.
இந்த திட்டத்தில் அரசுத் துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பு சமமாக இருக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. தேஜஸ் விமானங்களை தொடர்ந்து 5ஆம் தலைமுறை விமானங்கள் தயாரிப்பு இந்தியாவின் போர் தளவாட உற்பத்தி திறனை உலகிற்கு உரைப்பதாக உள்ளது. போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்கள், விமானங்களின் திறன் அடிப்படையில் அவை பல்வேறு தலைமுறைகளாக பிரிக்கப்படுகின்றன. தற்போதைக்கு 5ஆம் தலைமுறையே அதிநவீனமானதாக கருதப்படும் நிலையில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் 6ஆம் தலைமுறை போர் விமான தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன.