அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா பொறுப்பேற்பு!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முறைப்படி அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக கடந்த 30 ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கான இலாக்கா நேற்று ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்தந்த துறைகளின் அமைச்சர்களாக அவர்கள் பொறுப்பேற்று வருகின்றனர். இன்று காலை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் பதவியேற்றார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங், இன்று காலை போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் ராணுவ தளபதி பிபின் ராவத், கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி மார்ஷல் பி.எஸ்.டாணா ஆகியோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் தனது அமைச்சகத்துக்கு வந்த அவர், பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். பாதுகாப்பு துறை இணையமைச்சராக, ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்கும் பதவியேற்றார்.
இதே போல மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா, பொறுப்பேற்றார். அவருடன் துணை அமைச்சர்களான ஜி.கிஷன் ரெட்டியும் நித்யானந்த் ரெட்டியும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.