பப்ஜி விளையாட்டை தடை செய்த ராஜ்கோட் போலீசார்

பப்ஜி விளையாட்டை தடை செய்த ராஜ்கோட் போலீசார்
பப்ஜி விளையாட்டை தடை செய்த ராஜ்கோட் போலீசார்

பப்ஜி விளையாட்டை நாளை முதல் ஏப்ரல் 30 வரை  தற்காலிகமாக தடை செய்வதாக ராஜ்கோட் போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்

வயது வித்தியாசமின்றி அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். சமூகவலைத்தளங்கள், ஆன்லைன் கேம்கள் என எங்கெங்கோ பயணித்துக்கொண்டு இருக்கிறது ஸ்மார்ட் போன் உலகம். விளையாட்டு பிரியர்களை கவனத்தில் கொண்டு தினம் தினம் புதிது புதிதாக கேம்கள் களம் இறக்கப்படுகின்றன. அப்படியாக இப்போதைய ட்ரெண்டிங் கேம் பப்ஜி. பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து இந்த பப்ஜி கேமை விளையாடி வருகிறார்கள். 

பப்ஜி விளையாட்டு மூலம் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட குஜராத் அரசு,  பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை  மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டுமென சுற்றறிக்கை விடுத்தது. முன்னதாக நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனக் குஜராத் மாநில குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தியது.

இந்நிலையில் ராஜ்கோட் போலீசார் பப்ஜி விளையாட்டை தற்காலிகமாக தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி ராஜ்கோட்டில் நாளை முதல் ஏப்ரல் 30 வரை பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுவதாகவும், யாரேனும் பப்ஜி விளையாட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் சட்ட விதி 188ன் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே சூரத் மாவட்ட நிர்வாகமும் பப்ஜி விளையாட்டு நாளை முதல் தடை செய்யப்படவுள்ளதாகவும், இது குறித்த சுற்றறிக்கை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com