ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க முடியாது: தமிழக அரசு
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்ற 2012-ம் ஆண்டு நிலைப்பாட்டை பதில் மனுவாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆயுள் தண்டனை கைதிகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்ற 2012ஆம் ஆண்டின் நிலைப்பாடு பதில் மனுவாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்கள் மீதான கொலை குற்றம் மிகவும் தீவிரமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2006-ஆம் ஆண்டு மனுதாரர்கள் அரசுக்கு மனு கொடுத்தனர். அதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு நன்னடத்தை குழு அமைக்கப்பட்டதாகவும், மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட ஆட்சியர், சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய அந்தக் குழு, நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கவில்லை என்றும் தமிழக அரசு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அவர்களின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் நன்னடத்தைக் குழு கடந்த 2010-ஆம் ஆண்டு கூடியது என்றும் அப்போதும் அவர்களை விடுதலை செய்ய அந்தக் குழுவில் பரிந்துரைக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் நளினியை ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மன்னித்துவிட்டதாக கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது என்றும் அவர்களை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக ராஜீவ் காந்தி குடும்பத்தினர் எந்த ஒரு கடிதமும் எழுதவில்லை என்றும் நன்னடத்தை குழு தெரிவித்துள்ளதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பதில் மனுவை ஏற்ற நீதிபதிகள், அதை மனுதாரர்கள் தரப்புக்கும் தர உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைத்தனர்.