ராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு

ராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு

ராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு
Published on

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பேரன், இந்தியாவின் இரும்புப் பெண்மணி மற்றும் மறக்க முடியாத பிரதமரான இந்திரா காந்தியின் மகன் என்ற பெருமையை பிறக்கும் போதே கொண்டவர் ராஜீவ் காந்தி. இவரது சகோதரர் சஞ்சய் காந்தி. அரசியலில் இருந்து தூரமாக இருந்த ராஜீவ், இத்தாலியில் தன்னுடன் படித்த சோனியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 1980ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் சஞ்சய் காந்தி மரணமடைந்தார். இதையடுத்து தாய்க்கு உதவியாக அரசியலில் காலெடுத்து வைத்தார் ராஜீவ். 

1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற பொறுப்பை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார் ராஜீவ் காந்தி. அதன்பிறகு இந்தியாவின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவில் கணினித்துவம் அதிகரித்து, நவீன வளர்ச்சி கண்டது. தொழில்நுட்ப வசதிகளை இந்தியாவில் அதிகரிக்கச் செய்ய பல நடவடிக்கைகளை ராஜீவ் தொடர்ந்து மேற்கொண்டார்.

1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி, மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், அவரது மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகவும் உள்ளனர். மகள் பிரியங்கா காந்தி காங்கிரஸின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com