“ராஜஸ்தான் அரசு பற்றிய விஷயங்களை அம்பலப்படுத்துவேன்”-பதவிநீக்கத்தால் செக் வைக்கும் முன்னாள் அமைச்சர்

”ராஜஸ்தான் அரசு பற்றிய விஷயங்களை அம்பலப்படுத்துவேன்” என அம்மாநில அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்ட ராஜேந்திர சிங் குதா தெரிவித்துள்ளார்.
ராஜேந்திர சிங் குதா,  அசோக் கெலாட்
ராஜேந்திர சிங் குதா, அசோக் கெலாட் ani

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் இடையே உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அசோக் கெலாட் அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்தவர், பஞ்சாய்த்து ராஜ் அமைச்சர் ராஜேந்திர சிங் குதா.

இவர், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, “ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அளவு அதிகரிப்பதைப் பார்க்கும்போது மணிப்பூர் விவகாரத்தைவிட நமது மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இவருடைய பேச்சு, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தியில் இருந்த அசோக் கெலாட் அரசு, ராஜேந்திர சிங் குதாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியது. ’அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனவும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில் சட்டசபைக்கு இன்று சென்ற ராஜேந்திர சிங்கை அவைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர குதா, “சட்டமன்றத்திற்குள் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் என்னைத் தாக்கினர். ராஜஸ்தான் சட்டசபை தலைவர் என்னைப் பேசக்கூட அனுமதிக்கவில்லை. நான் பாஜகவில் இருப்பதாக என் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும்? அவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் சிவப்பு நிற டைரி ஒன்றை வைத்திருந்தேன். அதைத் தட்டிப் பறித்தார்கள். அந்த டைரி பறிக்கப்பட்டாலும் அதன் இன்னொரு பிரதி என்னிடம் உள்ளது. இது வெறும் டிரெய்லர்தான். அடுத்து படமே வெளிவரும். இந்த டைரி குறித்து முதல்வர் விவாதிக்கத் தயாரா” எனக் கேள்வி எழுப்பி, திடீரென கண்ணீர்விட்டு அழுதார்.

அவர், கையில் வைத்திருந்த டைரியில் ராஜ்யசபா தேர்தலின்போது குதிரை பேரத்தில் ஈடுபட்டது குறித்த விவரமும், எந்தெந்த எம்எல்ஏக்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களும் இருந்ததாகக் குறிப்பிட்டார். விரைவில் அனைத்தையும் அம்பலப்படுத்துவேன் எனவும் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

பூனியா
பூனியாani

இதுகுறித்து பாஜக தலைவர் பூனியா, ”ராஜேந்திர குதாவின் சிவப்பு டைரி குறித்து மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com