திருமணமான பெண்ணுடன் நெருக்கம் - இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்!
ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்து வீடியோ எடுத்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் பேவ் பலாடி கிராமத்தைச் சேர்ந்த 24வயது இளைஞர் ஒருவர், தனது மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரை கடத்திச் சென்ற ஒரு கும்பல், அவரை சிறுநீர் குடிக்கவைத்து துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவானது ராஜஸ்தான் மாநில முதலமைச்சர், மற்றும் முக்கிய அதிகாரிகளின் ட்விட்டர் பக்கங்களுக்கும் டேக் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கவனத்திற்கு வீடியோ வர, இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை வேண்டுமென சிரோகி மாவட்ட காவல்துறைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள சிரோகி காவல்துறை, பாதிக்கப்பட்ட நபர் அவருடைய மாமா வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் இவர் பழகிவந்ததாக தெரிகிறது. இது கிராமத்தினர் சிலருக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது. எனவே அவர்கள் அந்த இளைஞரை கடத்தி சிறுநீரைக் குடிக்கவைத்து வீடியோ எடுத்துள்ளனர்.
சுற்றிவளைக்கப்பட்ட 8 குற்றவாளிகளில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சிலரையும் தேடி வருகிறோம். மேலும் சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுத்த்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.