’ஹிஜாப் அணிந்தால் எப்படி சுவாசிப்பது’ - முஸ்லிம் மாணவிகளிடம் கேள்வி எழுப்பிய பாஜக எம்எல்ஏ!

ராஜஸ்தானில் இஸ்லாமிய மாணவிகளிடம் ஹிஜாப் அணிவது குறித்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் பால்முகுந்த் ஆச்சார்யா
ராஜஸ்தான் பால்முகுந்த் ஆச்சார்யாட்விட்டர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பள்ளி விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த பாஜக எம்.எல்.ஏ. பால்முகுந்த் ஆச்சார்யா, அங்கு ஹிஜாப் அணிந்து வந்திருந்த இஸ்லாமிய மாணவிகளிடம், “ஹிஜாப் அணிந்தால் எப்படி சுவாசிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியதாகவும், அதைக் கழட்டும்படி அவர் கூறியதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அப்பள்ளி இஸ்லாமிய மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் சுபாஷ் சௌக் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து அப்பள்ளி இஸ்லாமிய மாணவிகள், “அவர், எங்கள் பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவரை வரவேற்றோம். எங்களைப் பார்த்து, ’ஹிஜாப் அணியக்கூடாது’ என்றார். மேலும், ‘பெண்கள் ஹிஜாப் அணிந்தால் எப்படி சுவாசிக்க முடியும்’ என்று கேட்டார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எம்எல்ஏ ஆச்சார்யா மீது புகார் அளித்திருப்பதாகவும், இதனையடுத்து இச்சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து பதிலளித்த எம்.எல்.ஏ. பால்முகுந்த் ஆச்சார்யா , “பள்ளியில் இரு வேறு ஆடைகள் அணிவதற்கு விதிகள் இல்லை. அனைவரும் ஒரே மாதிரியான சீருடையைத்தான் பள்ளிக்கு வரும்போது அணிய வேண்டும். நான் பள்ளிவாசலில் சென்று ஹிஜாபை கழற்றுமாறு மாணவிகளிடம் கூறவில்லை. பள்ளிக்குள் அணிந்து வர வேண்டாமென மட்டுமே அறிவுறுத்தினேன்” என விளக்கமளித்துள்ளார்.

அதேநேரத்தில் இவ்விவகாரம் குறித்து அம்மாநில விவசாயத் துறை அமைச்சர், கிரோரி லால் மீனா, “ஹிஜாப் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கும் ஹிஜாப் தடைச் செய்யப்பட வேண்டும். ஒழுக்கத்திற்கு அனைவரும் ஒரே உடையில் வருவது அவசியம். இதுகுறித்து முதல்வரிடம் பேசுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தற்போது அம்மாநில முதல்வராக பஜன்லால் சர்மா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது, உடுப்பியில் உள்ள ஓர் அரசுக் கல்லூரியில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வர அந்தக் கல்லூரி முதல்வர் தடை விதித்தார். அந்தத் தடையை மீறி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சித்தராமையா முதல்வராக உள்ளார். இதையடுத்து, கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கான தடையை அவர் நீக்கியுள்ள நிலையில், ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசைச் சார்ந்தவர்கள் ஹிஜாப் குறித்து பேசியிருக்கும் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com