
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநில அமைச்சர்களில் ஒருவராக இருப்பவர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ். இவருடைய மருமகன் ஹர்ஷ்தீப் கச்சாரியாவாஸ். இவர், ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரச்னையில் ஈடுபட்டது, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அக்காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து அந்த ஹோட்டல் உரிமையாளர் அபிமன்யு சிங், “ஹர்ஷ்தீப் மற்றும் அவருடைய நண்பர்கள் இரவு 10:15 மணியளவில் குடிபோதையில் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அப்போதே அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹோட்டலில் இருந்த பிற விருந்தினர்களுடனும் ஹர்ஷ்தீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் ஹோட்டல் ஊழியர்களிடம், ‘ஒவ்வோர் அறையையும் திறந்துகாட்டி, அங்குள்ள விருந்தினர்களைப் பார்க்க வேண்டும்’ என்று கேட்டனர். அதற்கு, ‘இது எங்கள் ஹோட்டல் விதிமுறைக்கு எதிரானது. விருந்தினரின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமான விஷயம். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்’ என அவர்கள் பதிலளித்துளனர்.
இதனால் ஹர்ஷ்தீப் மற்றும் அவருடைய நண்பர்கள் ஹோட்டலில் இருந்த பொருட்களைச் சேதப்படுத்தினர். இதற்காக, அவர்கள் 20 முதல் 25 பேர்களை அழைத்தனர். அத்துடன் எங்களையும் மிரட்டினர். இதுகுறித்து காவல் துறைக்கு நாங்கள் போன் செய்தோம். அப்போது 2 போலீசார் மட்டுமே அங்கு வந்தனர். அவர்கள், ஹர்ஷ்தீப் யாருடன் தகராறு செய்தாரோ, அந்த விருந்தினரை மட்டும் விசாரித்தனர். அப்போது போலீசார் முன்னிலையிலேயே ஹர்ஷ்தீப் குழுவினர் அந்த விருந்தினரை அடித்தனர். அது, எங்கள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “ஹர்ஷ்தீப் குழுவினர், மது வகைகளையும் உணவுப் பொருட்களையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் அதற்குக்கூட அவர்கள் பணம் கொடுக்கவில்லை. இறுதியில் அவர்கள் தொழில்நுட்ப அறைக்குச் சென்று அங்கு நடந்த ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்தனர். ஆனால், நாங்கள் அதை அவர்களிடமிருந்து காப்பாற்றினோம். தொடர்ந்து எங்களுக்கு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பிரச்னைகள் நடந்தபின்னரும், போலீசார் ஹர்ஷ்தீப் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த விருந்தினரை மட்டுமே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார். என்றாலும் ’சிசிடிவி ஆதாரங்களை எப்ஐஆரில் சமர்ப்பிக்க முடியவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஜெய்ப்பூரில் உள்ள வைஷாலி காவல் நிலைய SHO சிவநாராயண், ”இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அந்த ஹோட்டலில் நடைபெற்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதை வைத்து அங்குள்ள மக்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ’ஹர்ஷ்தீப், அமைச்சரின் உறவினர் என்பதால் உங்கள் வணிகம் பாதிக்கப்படும்’ எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு ஹோட்டல் உரிமையாளர் அபிமன்யு சிங், ’அசோக் கெலாட் அரசு மீதும் நீதிமன்றத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.