பாஜக அரசுக்கு கவலை அளிக்கும் ராஜஸ்தான்.. என்ன சிக்கல்?
ராஜஸ்தானில் பஜன் லால் சர்மா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்குக் கவலையளிக்கும் அறிகுறிகளைக் காட்டுகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 41 மாவட்டங்களில், 37 மாவட்டங்களுக்கான பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், பஞ்சாயத்து சமிதி மற்றும் மாவட்டப் பரிஷத் ஆகிய இரண்டிலுமே பாஜகவை விடக் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
பஜன் லால் சர்மா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் தோல்வி ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைக் காட்டுகிறது. 1998-ஆம் ஆண்டு முதல், ராஜஸ்தான் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சியை மாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். முக்கியக் கொள்கை முடிவுகளை எடுப்பதில் தாமதம், முதல்முறை சட்டமன்ற உறுப்பினரான சர்மாவை முதல்வராக்கி, வசுந்தரா ராஜே போன்ற அனுபவம் வாய்ந்த உள்ளூர் தலைவர்களை பாஜக ஓரங்கட்டியது ஆகியவை இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
பிரதமர் மோடியின் பிம்பத்தை மட்டுமே நம்பியிருப்பது கிராமப்புறங்களில் எடுபடவில்லை என்பதையும், கிராமப்புறங்களில் காங்கிரஸ் இன்னமும் வலுவாக உள்ளது என்பதையும் இந்த முடிவுகள் உணர்த்துகின்றன. 2028 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளதால், பாஜக தனது வியூகங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையே, உள்ளாட்சி மன்றத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல்கள் வரும் நவம்பர் 25 முதல் 28 வரை நடைபெறவுள்ளன.
