‘லவ் ஜிகாத்’ என்பது பொய்: மேற்கு வங்க கூலித்தொழிலாளி கொலையில் திருப்பம்!
மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது அப்ரசூல் என்பவர் ராஜஸ்தானில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு லவ் ஜிகாத் காரணமல்ல என்று அவரது மகள் ரெஜினா கூறியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலம் மால்டா நகரத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள கலிஷாகாவில் உள்ளது சாயித்பூர் கிராமம். தற்போது இந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தக் கிராமத்தை சேர்ந்தவர் முகமது அப்ரசூல் (50). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. அப்ரசூல், ராஜஸ்தானில் தங்கி பணிப்புரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துக்கு தொடர்ந்து பணம் அனுப்பி வந்துள்ளார். பண்டிகை காலங்களில் தனது கிராமத்திற்கு வந்து குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழித்துவிட்டு பின் மீண்டும் ராஜஸ்தானுக்கு சென்றுவிடுவார். இந்நிலையில் நேற்று இவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு தான் 50,000 ரூபாய் பணம் அனுப்புவதாகவும் வங்கிக்கு சென்று அதனை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். அவரது மனைவி நீண்ட நேரமாக வங்கியில் காத்திருந்தும் அவரது கணக்கில் பணம் ஏறவில்லை. இதையடுத்து வீட்டுக்குத் திரும்பினார்
இந்நிலையில் ‘லவ் ஜிகாத்’ எனக்கூறி ராஜஸ்தானில் ஒருவரை, கோடாரியால் தாக்கி கொலை செய்து தீவைத்து எரிக்கும் காட்சியை செல்போனில் படம் பிடித்து அதனை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் அது மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது அப்ரசூல் என்பது தெரியவந்தது.
முகமது அப்ரசூல் கொலை செய்தது குறித்து அவரது மகள் ரெஜினா தெரிவிக்கையில், லவ் ஜீகாத் என்பது பொய், தனது தந்தைக்கு மற்ற பெண்களுடன் தொடர்பு உள்ளது என்பதை ஏற்கமுடியாது என்று கூறியுள்ளார். தனது தந்தை முகமது அப்ரசூலுடன் தனது கணவரும் பணிபுரிந்து வந்ததாக தெரிவித்துள்ளார். அவருக்கு இதுபோன்று வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தால் அவர் நிச்சயம் எனது தாயிடம் முறையிட்டிருப்பார் என்று கூறினார். நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து நீதியைக் கோருகிறோம், என் தந்தையை கொன்றவரை அரசு தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கொலைகாரன் தூக்கிலிடப்பட வேண்டும் என்று ரெஜினா கூறினார்.