ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் குழப்பமா ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்ற சச்சின் பைலட்
ராஜஸ்தான் மாநில அரசின் துணை முதல்வராக இருக்கும் சச்சின் பைலடன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 25 பேருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். இந்நிலையில் ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக் கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.
மேலும், மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அசோக் கெலாட் "கொரோனா பிரச்னை உள்ள காலத்தில் மாநில அரசு மக்களுக்காக பணியாற்றி வருகிறது. ஆனால், பா.ஜ., தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரையும் இணைந்து பணியாற்றி வருகிறது.ஆனால், பா.ஜ., அனைத்து எல்லையை மீறியுள்ளது. அரசை கவிழ்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அக்கட்சி எடுத்து வருகிறது.
மேலும் "ராஜஸ்தானில் ஆட்சியமைக்க, எம்.எல்.ஏ.,க்கள் அணி மாற விலை பேசப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. சில எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.15 கோடி வரை பணம் அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சலுகைகள் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 7 எம்.எல்.ஏ.,க்களை வாங்கிய பா.ஜ., தற்போது, அதனை இங்கேயும் செய்ய நினைக்கின்றனர்" என அசோக் கெலாட் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில் "ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆட்சி செய்யும் திறமை இல்லை. இதனால் பாஜக ஆட்சியை கவிழ்க்க முனைவதாக தொடர்ந்து புகார் கூறி வருகிறார். அசோக் கெலாட் அரசுக்கு போதிய பெரும்பான்மை இருந்தால் எப்படி அரசை கவிழ்க்க முடியும். அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை" எனக் கூறினார்.
இந்நிலையில் அம்மாநில துணை முதல்வர் சச்சின் பைலடன் தனது ஆதரவுக்கொண்ட 25 எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.