நடுரோட்டில் 13 கைதிகளை உள்ளாடையுடன் 2 கி.மீ அழைத்துச் சென்ற போலீசார்
ராஜஸ்தானில் உள்ளாடையுடன் 13 கைதிகளை 2 கி.மீ தூரம் பேரணியாக போலீசார் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில், பிரபல ரவுடி விக்ரம் குர்ஜார் என்ற பாப்லாவை, பெஹ்ரார் போலீசார் கைது செய்தி ருந்தனர். இந்த விஷயம் வெளியே கசிந்த சில நிமிடங்களில், சினிமாவில் வருவது போல, ஏ.கே.47 உட்பட துப்பாக்கிகளுடன் வந்த ஒரு கும்பல், போலீஸ் ஸ்டேஷனில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. அங்கிருந்த போலீசார் உயிரை காக்க தப்பியோடினர். இதையடுத்து ரவுடி விக்ரமை மீட்ட, அந்தக் கும்பல் தப்பியது. கடந்த 6 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் கைகளில் விலங்குகளை மாட்டி, உள்ளாடையுடன் முகத்தை மறைக்காமல் அங்குள்ள மார்கெட் பகுதியில் சுமார் 2 கி.மீ தூரம் பேரணியாக நேற்று அழைத்துச் சென்றனர். உடன் கமாண்டோ படையினர் உட்பட சுமார் 150 போலீசார் வந்தனர். அதை சாலையில் சென்ற பொதுமக்கள் வீடியோ எடுத்தனர்.
இதுபற்றி அந்த பகுதி எஸ்.பி, அமன்தீப் சிங் கபூர் கூறும்போது, ‘’அவர்கள், காவல் நிலையத்தில் இருந்து ரவுடியை எப்படி மீட்டுச் சென்றார்கள் என்பதை செய்து காண்பிப்பதற்காகத்தான் அழைத்துச் செல்லப் பட்டனர். இது குற்ற விசாரணையின் நடைமுறையில் உள்ள ஒன்றுதான். இதன் மூலம் பொதுமக் களுக்கு எந்த செய்தியையும் நாங்கள் சொல்லவில்லை’’ என்றார்.
ஆனால், இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று சர்ச்சை எழுந்துள்ளது.