காங்கிரஸ் தலைமை மீது விமர்சனம்: ராஜஸ்தான் முதல்வரின் சிறப்பு பணிகள் அதிகாரி ராஜினாமா
பஞ்சாப்பின் பரபரப்பான அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சிறப்பு பணிகள் அதிகாரி (OSD) லோகேஷ் சர்மா வெளியிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக விளக்கமளித்த லோகேஷ் சர்மா, "நான் செய்த ட்வீட்டுக்கு அரசியல் வண்ணம் கொடுத்து, அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பஞ்சாபின் அரசியல் நகர்வுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் நான் ட்விட்டரில் இருக்கிறேன், ஆனால் எந்த சர்ச்சைக்குரிய வார்த்தைகளையும் நான் எழுதியதில்லை"என்று தனது ராஜினாமா கடிதத்தில் கூறினார். மேலும், “மாநில அரசு மற்றும் முதலமைச்சரின் பேச்சு, அரசின் முடிவுகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அரசின் நேர்மறையான எண்ணம் ஆகியவற்றை மக்களிடம் முன்னெடுத்துச் செல்ல நான் எப்போதும் முயற்சித்தேன். ராஜஸ்தான் முதல்வர், அரசு மற்றும் அதன் செயல்பாடுகளை களங்கப்படுத்தும் மக்களுக்கு உண்மைகளுடன் பதிலளிப்பதன் மூலம் தவறான பிரச்சாரத்தை நிறுத்த முயற்சித்தேன் "என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
லோகேஷ் சர்மா வெளியிட்ட அந்த சர்ச்சைக்குரிய ட்வீட்டில், "வலிமையானவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், அற்பமானவர்கள் பலப்படுத்தப்படுகிறார்கள் ... வேலி பயிர்களை உண்ணும்போது, அத்தகைய வயலை யார் காப்பாற்ற முடியும்" என்று அவர் எழுதியிருந்தார். இந்த ட்வீட் பஞ்சாப் அரசியல் சூழலுடன் தொடர்புப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டது.