எருமைப் பாலா.. பசும்பாலா? IQவிற்குச் சிறந்தது எது? ராஜஸ்தான் அமைச்சரின் கருத்தால் சர்ச்சை!
அறிவு வளர்ச்சிக்குச் சிறந்த பால் எது என்பது குறித்து ராஜஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ”நாட்டு ’’மாடுகளின் பால் குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் ஆற்றலை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில், எருமைப்பால் அவர்களை சோம்பலாகவும் மந்தமாகவும் ஆக்குகிறது” என அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பஜன்லால் சர்மா உள்ளார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர், ”நாட்டு மாடுகளின் பால் குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் ஆற்றலை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில், எருமைப்பால் அவர்களை சோம்பலாகவும் மந்தமாகவும் ஆக்குகிறது” எனத் தெரிவித்த அவர், அதற்கான ஓப்பீட்டையும் வழங்கினார். அதுகுறித்து அவர், “பசுவின் கன்றையும் எருமைக் கன்றையும் தங்கள் தாய்களைத் தூரத்திலிருந்து கண்டுபிடிக்க வையுங்கள். எருமைக் கன்று தன் தாயைக் கண்டுபிடிக்கப் போராடும்போது, பசுவின் கன்று நேராகவே அதன் தாயிடம் ஓடும். இந்த வித்தியாசம், அவர்கள் உட்கொள்ளும் பாலின் அறிவாற்றல் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. இரண்டு கன்றுகளுக்கும் முழுமையாக உணவளித்த பிறகு, எருமைக் கன்று இருமி தூங்கிவிடும். அதேநேரத்தில், பசுவின் கன்று கூர்மையான புத்திசாலித்தனத்தைக் காட்டி சுறுசுறுப்பாகத் துள்ளிக் குதிக்கும்” என்றார்.
அவருடைய இந்தக் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், ஆன்லைனில் விவாதங்களையும் தூண்டியது. எருமைப்பாலைவிட பசுவின் பால் அறிவாற்றல் நன்மையை அளிக்கிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்கள் கூறுகின்றனர். எருமைப் பாலில் பொதுவாக அதிக கொழுப்புச் சத்து 6 முதல் 15 சதவீதம் வரை இருப்பதால், அது அதிக கலோரி அடர்த்தியைக் கொண்டதாக அமைகிறது என்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வேறுபாடுகள் குழந்தைகளின் அறிவுத்திறனில் அளவிடக்கூடிய வேறுபாடுகளாக மாறாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, பசும்பால் குழந்தைகளைப் புத்திசாலிகளாக்குகிறது அல்லது எருமைப்பால் மனதைப் பலவீனப்படுத்துகிறது என்று கூறுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்கின்றனர்.

