ராஜஸ்தான்: பாஜக வெற்றி.. முதல்வர் ரேஸில் யார்? மீண்டும் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு வாய்ப்பு?

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜஸ்தான், வசுந்தரா ராஜே சிந்தியா
ராஜஸ்தான், வசுந்தரா ராஜே சிந்தியாட்விட்டர்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும், இன்று (டிச.3) காலை முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மிசோரமில் மட்டும் நாளை (டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நிலவரப்படி, பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதியை வீழ்த்தி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

மகாராஜாக்களின் மண்ணான ராஜஸ்தானில் அரியணையை வசமாக்கியுள்ளது பாரதிய ஜனதா. 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கட்டில் மீண்டும் வசப்பட்டுள்ள நிலையில் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்குதான் முதல்வர் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கணிப்புகள் உள்ளன.

இதையும் படிக்க: ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர்.. 3 மாநிலங்களில் அபார வெற்றி.. உற்சாக கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்!

வசுந்தராவின் தாய் விஜயராஜே சிந்தியா பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். வசுந்தரா கடந்த 20 ஆண்டுகளாக ராஜஸ்தான் பாஜகவின் முகமாக இருந்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வசுந்தராவை முன்னிலைப்படுத்துவதை தவிர்த்து வந்த பாஜக தலைமை, அதன் தொடர்ச்சியாக அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்காமலேயே தேர்தல் களம் கண்டது.

பிரதமர் மோடியையும் அவரது ஆட்சியின் சாதனைகளையும் காங்கிரஸ் ஆட்சியின் குறைபாடுகளையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி தேர்தல் வியூகம் வகுத்தது பாஜக. இந்த வியூகத்திற்கு வெற்றிகிட்டியுள்ள நிலையில் முதல்வர் நாற்காலிக்கு யாரை பாஜக யாரை தேர்வு செய்யப்போகிறது என்ற சுவாரசியமான கேள்வி எழுந்துள்ளது.

கட்சித்தொண்டர்கள் மத்தியில் வசுந்தரா ராஜேவுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெற்றிபெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்களில் கணிசமானோர் வசுந்தராவின் ஆதரவாளர்கள் என்பது மட்டுமல்ல சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பலரும் கூட அவரது ஆதரவாளர்கள்தான் எனக் கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் வசுந்தராவை தவிர்த்து வேறு ஒருவரை முதல்வர் நாற்காலியில் அமரவைக்கும் துணிச்சலான முடிவை பாஜக தலைமை எடுக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது.

அதேநேரம் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா, மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன்ராம் மெக்வால் மற்றும் துறவி பாலக்நாக் யோகி உள்ளிட்டோரின் பெயரும் முதல்வர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி வேறு ஒருவரை முதல்வராக்கினால் வசுந்தரா கடும் அதிருப்தியடைவார் என்றும் கருதப்படுகிறது. ராஜஸ்தானில் தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல... அதற்கு பின் முதலமைச்சர் தேர்வும் விறுவிறுப்பான ஒன்றாகவே உள்ளது.

இதையும் படிக்க: "சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் இதுதான் விளைவு" - காங். தோல்வி குறித்து வெங்கடேஷ் பிரசாத் காட்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com