செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை துண்டாகி கொடுமை
ராஜஸ்தானில் ஒரு பிரசவத்தின்போது செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் தலை ஒரு பாகம், உடல் ஒரு பாகம் என தனித்தனியாக துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நிறைமாத கர்ப்பிணியான இவர் ஜெய்சால்மார் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு ஆண் செவிலியர்கள் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். வயிற்று வலியால் அப்பெண் துடிக்க, குழந்தை லேசாக வெளியே வர ஆரம்பித்திருக்கிறது.அப்போது அந்த இரண்டு செவிலியர்களும் அலட்சியமாக குழந்தையை வேகமாக பிடித்து இழுத்துள்ளனர். இதில் குழந்தையின் தலை மற்றும் உடம்பு பாகங்கள் துண்டாகிவிட்டன. தலை கர்ப்பப்பை உள்ளேயே இருந்துவிட உடல்பகுதி மட்டும் அவர்கள் வேகமாக இழுத்ததால் துண்டாகி வெளியே வந்ததுள்ளது.
இதனையடுத்து நிலைமை மோசமானதை உணர்ந்த ஆண் செவிலியர்கள் இரண்டு பேரும் செய்த தவறை மறைக்க முயற்சித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல் குழந்தையின் சிதைந்த உடல் பகுதியை பிணவறைக்குள் வைத்துவிட்டனர். அத்துடன் தங்களால் முடியாது எனவும் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி அப்பெண் ஜோத்பூரில் உள்ள உமைத் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உமைத் மருத்துவமனையின் மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்தச் செவிலியர்கள், பிரசவம் முடிந்துவிட்டதாகவும், நஞ்சுக்கொடி மட்டும் கர்ப்பப்பையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து உமைத் மருத்துவமனை மருத்துவர்கள், அப்பெண்ணுக்கு மீண்டும் பிரசவம் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அப்பெண்ணின் கர்ப்பப்பையில் தலை மட்டும் சிதைவடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்து அப்பெண்ணின் உறவினர்களுக்கு உமைத் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் மீது அப்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட ஆண் செவிலியர்கள் இரண்டும் பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ராஜஸ்தான் அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அப்பெண்ணின் நிலைமை தற்போது தேறிவருவதாக உமைத் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.