
மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜூனியர் அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கியுள்ளார். 4 முன்னாள் அதிகாரிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். இதில் முன்னாள் மத்திய உள்துறை செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ராஜ்குமார் சிங்குக்கு, மின்சாரம் மற்றும் புதுபிக்கக் கூடிய வளங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்குமார் சிங், 1990 ஆம் வருடத்தில் பீகார் மாநிலத்தின் சாமஸ்திபுர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் உத்தரவின்படி அத்வானியை கைது செய்தார். அயோத்தியை நோக்கி ரதயாத்திரை செல்ல முயன்றபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரது நடவடிக்கையால் பெரிய அளவிலான கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பேசப்பட்டது.
இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியின் 1999-ம் ஆண்டு முதல் 2004 வரையிலான ஆட்சியில் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த போது, அந்த துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2011-13 வரை உள்துறை செயலாளராக பதவி வகித்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜ்குமார் சிங் ஓய்வுக்கு பின் 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் 2014 தேர்தலில் பீகார் மாநிலம் அர்ராக் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.