கடவுளின் தேசத்தில் அதிகரிக்கும் புதுமணப்பெண்களின் மரணங்கள்

கடவுளின் தேசத்தில் அதிகரிக்கும் புதுமணப்பெண்களின் மரணங்கள்
கடவுளின் தேசத்தில் அதிகரிக்கும் புதுமணப்பெண்களின் மரணங்கள்

கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. வரதட்சணையின் பெயரால் திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் வணிக ஒப்பந்தமாக தரம் தாழ்த்திவிடக்கூடாது என முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு 60ஆண்டுகளைக் கடந்து விட்டது. 21ஆம் நூற்றாண்டிலும் வரதட்சணைப் புகாரா? எனக் கேட்பவர்களுக்கு, ஆம் என்றுதான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. வரதட்சணை கொடுமைக்கு, பெண்களின் உயிரும் பறிபோன சம்பவங்கள் தான் கடவுளின் தேசத்தில் அரங்கேறியுள்ளது.

100 சவரன் நகை. ஒரு ஏக்கர் நிலம். விலையுயர்ந்த கார். இத்தனையும் கொடுத்தும். பத்தாது எனக்கூறி, வரதட்சணைக் கொடுமை செய்ததால் கொல்லத்தைச் சேர்ந்த விஸ்மயா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம்தான் தற்போது கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஸ்மயா-கிரண் இடையே திருமணம் நடைபெற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே விஸ்மயாவின் உயிர் போயிருக்கிறது. இதற்கு கிரண் வரதட்சணை கேட்டு அவரை அடித்து துன்புறுத்தியதே காரணம் என்று புகாரளிக்கப்பட்டது. இதனை அடுத்து கிரண் கைது செய்யப்பட்டுள்ளார். விஸ்மயா உயிரிழந்த விவகாரம் ஏற்படுத்திய அதிர்வலைகள் நீங்கும் முன்னரே மேலும் சில பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த தகவல்கள் வெளியாகி கடவுளின் தேசத்தை உலுக்கியுள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற இளம் பெண், திருமணமான சில மாதங்களிலேயே அவரது காதல் கணவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கணவரின் தந்தை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதே போல ஆலப்புழாவில் ராணுவ வீரரின் மனைவியான சுசித்ரா என்ற பெண், திருமணமான இரண்டு மாதத்திலேயே தனது கணவரின் வீட்டில் உயிரை விட்டுள்ளார்.

அடுத்தடுத்து இளம்பெண்கள், தங்களது கணவரின் வீட்டில் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வரதட்சணைத் தொடர்பான புகாரளிக்க, 24மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை, முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்து வருகின்றன.

பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக வேதனை தெரிவித்துள்ள பினராயி விஜயன், மனைவியை அடிப்பது ஆண்மை என்றும், மன்னிப்பதும், சகித்துக்கொள்வதும் பெண்மையின் அடையாளம் என்றும் நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது போன்ற தவறான கருத்துகளை நம் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என வேண்டுகோள் வைத்துள்ள அவர், பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு இடம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெண்கள் விற்பனைக்கு அல்ல என தங்கள் வீடுகளில் எழுதி ஒட்டியுள்ள, ஏராளமான பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com