44 ஆண்டுகளில் இல்லாத பருவமழை!

44 ஆண்டுகளில் இல்லாத பருவமழை!

44 ஆண்டுகளில் இல்லாத பருவமழை!
Published on
ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள்படி, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 25% அதிக மழை பெய்துள்ளது. இந்த ஆகஸ்டில் 1976-க்குப் பிறகு முதல் முறையாக 28.4% அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் பதிவான உச்சபட்ச மழை கடந்த 1926ஆம் ஆண்டு பெய்த 33% மழை ஆகும். இந்த ஆண்டு ஒட்டுமொத்த பருவமழை 8% அதிகம் பெய்துள்ளது.
நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் தவிர பிற மாநிலங்களில் மழை பற்றாக்குறை நிலவுகிறது என்று ஸ்கைமெட் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
 
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, செப்டம்பர் 3 ஆம் தேதி வரை லேசானது முதல் பரவலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய வானிலை அறிக்கைப்படி வடக்கு சத்தீஸ்கரில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த 2 நாள்களில் வடக்கு மத்தியப்பிரதேசம் மற்றும் தெற்கு உத்தரப்பிரதேசத்தை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், அலைகள் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், கிழக்கு உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் மத்தியப்பிரதேசத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 
மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் மண் சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் என்று ஐஎம்டி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 
கடந்த ஜூலை மாதம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதன்பிறகு ஆகஸ்டில் 5 முறை இதுபோன்ற காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com