தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் சில நாட்கள் மட்டும் மழையை கொடுத்தது. பின்னர் பல நாட்கள் வறண்ட வானிலையே நீடித்த நிலையில், மீண்டும் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.