ஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்

ஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்
ஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்

போபால் ரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரின் 4 வயது குழந்தையின் பசியை போக்க ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் பால் பாக்கெட்டையும் கொண்டு ஓடிய ரயில்வே நிலைய காவலரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

போபால் ரயில் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் இந்தர் யாதவ். இவர் வழக்கம்போல் போபால் ரயில் நிலையத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வரும் “ஷார்மிக்” ரயிலானது வந்துள்ளது. அது சிறப்பு ரயில் என்பதால் போபால் ரயில் நிலையத்தில் சில நிமிடங்களே நிற்கும்.

அப்போது அதில் பயணித்த ஷாஃபியா ஹாஷ்மி என்ற பயணி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யாதவிடம் தனது குழந்தை பால் இல்லாமல் அழுதுகொண்டே இருப்பதாகவும், குழந்தையின் பசியைப் போக்க வலுக்கட்டயாமாக தண்ணீரில் முக்கி பிஸ்கெட்டுகளை கொடுத்து வருவதாகவும் கூறி, எனது குழந்தைக்கு பால் வாங்கி தர முடியுமா என உதவி கேட்டுள்ளார். இதனை கேட்டு மனமிறங்கிய யாதவ் வேகமாக ரயில்நிலையத்தில் இருந்த கடையில் பால் பாக்கெட் வாங்கச் சென்றுள்ளார். அப்போது ரயிலானது புறப்பட்டதாகத் தெரிகிறது. இதனை கண்ட யாதவ் ஒரு கையில் துப்பாக்கியையும், மறு கையில் பால் பாக்கெட்டையும் தூக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடியுள்ளார். குழந்தைக்காக அவர் ஓடிய காட்சி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமாராவில் பதிவாகியிருந்தது.


அதன் பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதனை பார்த்த ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் யாதவை பாராட்டும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “ குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக யாதவ் ரயில் நிலையத்தில் ஓடியது அவரின் கடமை உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவரின் இந்த செயல் பாராட்டத்தக்கது. அவரது கடமையுணர்ச்சியை பாராட்டும் வகையில் அவருக்கு பணம் வழங்கப்படும்” என பதிவிட்டார்.

இது குறித்து ஷாஃபியா ஹாஷ்மி கூறும் போது “ எனது குழந்தையின் பசியைப் போக்க நான் வலுக்கட்டயமாக தண்ணீரில் முக்கி பிஸ்கெட்டுகளை கொடுத்து வந்தேன். அதனால்தான் நான் யாதவிடம் உதவி கெட்டேன். அவர்தான் எங்கள் வாழ்வின் உண்மையான ஹீரோ” எனக் கூறினார்.

இந்நிலையில் ரயில்வே ஊழியர் குழந்தைக்கு ஓடி வந்து பால் பாக்கெட் கொடுத்த வீடியோ தொகுப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள பியூஸ் கோயல் “ ஒரு கையில் துப்பாக்கி மறு கையில் பால்பாக்கெட் - எப்படி இந்திய ரயில்வே ஒரு உசேன் போல்டை விட்டுச் சென்றது” என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com