இந்தியா
லக்கிம்பூர் வன்முறை: நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
லக்கிம்பூர் வன்முறை: நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
லக்கிம்பூர் சம்பவத்திற்காக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 3-ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரிக்கு மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உத்தரப்பிரதேசம் துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர், மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய இணையமைச்சரவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிவரை ரயில் மறியல் போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. ஹரியானாவில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் விரைவு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்திய விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ரயில்வே மண்டலத்தில் தற்போது 30 இடங்களில் 8 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், விவசாயிகளின் ரயில் மறியல் போரட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அம்மாநில காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.