5 ஆண்டுகள் ஜிஎஸ்டி விதிமீறல் நடந்ததாக அதானி குழும நிறுவனத்தில் ரெய்டு! எங்கு தெரியுமா?

5 ஆண்டுகள் ஜிஎஸ்டி விதிமீறல் நடந்ததாக அதானி குழும நிறுவனத்தில் ரெய்டு! எங்கு தெரியுமா?
5 ஆண்டுகள் ஜிஎஸ்டி விதிமீறல் நடந்ததாக அதானி குழும நிறுவனத்தில் ரெய்டு! எங்கு தெரியுமா?

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் நிறுவனத்தில் ஜிஎஸ்டி விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், அதன்பேரில் அங்கு ஜிஎஸ்டி துறையின் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையால், ஆசியாவிலேயே மிகப் பிரபலமான தொழில் நிறுவனமான அதானி குழுமம் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், உலக அளவில், அதானி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாய் வெடித்து வருகிறது. இந்தியாவில், நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கப்பட்டதுடன், அதானி குறித்து பிரதமர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அதானி குழுமத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் விவகாரத்தால் தொடர்ந்து பங்குசந்தையில் சரிவை சந்தித்து வந்த அதானி குழுமம், கடந்த 2 நாட்களாக 2 வர்த்தக பிரிவுகளில் ஏற்றத்தை கண்டது. இந்நிலையில் தான் அதானி குழுமத்தின் மற்றொரு விதிமீறல் செயல்பாடாக, அதானி வில்மர் குழுமத்தில் ஜிஎஸ்டி விதிமீறல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் படி இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் குழுமத்தில், மாநில கலால் வரித்துறையினர் சோதனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதானி வில்மர் குழுமம் கடந்த 5 ஆண்டுகளாக ஜிஎஸ்டி விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தொடர்பாக அதானி வில்மர் குழுமத்தின் அலுவலகங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் அறிவித்துள்ள தகவலின் படி, அதானி வில்மர் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையானது ஜிஎஸ்டியை சரிவர கட்டாமல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதால் நடத்தப்பட்டதாகவும், சோதனையின் போது வில்மர் குழுமத்தின் மாநில அளவிலான உள்ளீட்டு வரிக்கடன் தொடர்பான தகவல்கள் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் பரிசோதனை முடிவடைந்த நிலையில், அதுதொடர்பாக எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கைக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்ததால் அதன் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த சர்ச்சைகளை தொடர்ந்து அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ், அதானி வில்மர், அதானி போர்ட்ஸ் மற்றும் பிற நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com