\
 “இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கம்” - ராகுல் காந்தி

“இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கம்” - ராகுல் காந்தி

“இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கம்” - ராகுல் காந்தி
Published on

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி, இந்திய விமானப்படை விமானிகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படை ஏறக்குறைய 21 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com