“தெலுங்கானாவில் குடும்ப ஆட்சி” - “ராகுல் இன்னும் வளர வேண்டும்”

“தெலுங்கானாவில் குடும்ப ஆட்சி” - “ராகுல் இன்னும் வளர வேண்டும்”
“தெலுங்கானாவில் குடும்ப ஆட்சி” - “ராகுல் இன்னும் வளர வேண்டும்”

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்க போவதில்லை என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். 

தெலுங்கானா மாநிலத்தில் குடும்ப ஆட்சி நடைபெறுவதாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மீது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பதிலுக்கு, ராகுல் காந்தி இன்னும் வளர வேண்டும், பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்று சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.

ஐதராபாத் நகரில் ராகுல் காந்தி இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று சுய உதவிக்குழு பெண்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது ராகுல் பேசுகையில், “இன்றைய தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தவர்கள் தான் அனைத்து பலன்களையும் அடைகிறார்கள். குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. முதலமைச்சரின் மகன் மற்றும் மருமகன் அமைச்சர்களாக உள்ளனர். மகள் எம்.பி ஆக உள்ளார். விவசாயிகளின் நிலங்கள் பிடிங்கப்படுகிறது. சுய உதவிக் குழு பெண்களுக்கு உதவிகள் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு உதவிகள் கிடைப்பதில்லை. ஊழல் அதிகம் காணப்படுகிறது. இங்கும் டெல்லியிலும் ஒரே மாதிரியான நிலைதான் உள்ளது” என்றார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அடுத்து அவரை சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார். சந்திரசேகர் ராவ் பேசுகையில், “ராகுல் காந்தி இன்னும் வளர வேண்டும், பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் இந்த அரசியல் அணுகுமுறையை தான் இளைஞர்கள் விரும்புகிறர்களா? இளைஞர்கள் தரமான மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்களின் பிரச்னைகளை கையாள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தவறிவிட்டது. ராகுல் காந்தியை பார்த்து நாங்கள் பயப்படவில்லை” என்றார்.

பாரதிய ஜனதா, காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க சந்திரசேகர ராவ் முயற்சிகள் எடுத்து வந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது ஒரு நாளில் நடந்து விடாது. ஒடிசா முதலமைச்சரிடம் இது தொடர்பாக பேசவுள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தனது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தயாராக இருக்கிறது. அடுத்த மாதமே தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளேன். வரும் தேர்தலின் போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை” என்று சந்திரசேகர் ராவ் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com