'ராகுலின் தமிழ் வணக்கம்': தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி!
இன்று முதல் தமிழகத்தில் தனது தேர்தல் பரப்புரையை ராகுல் காந்தி தொடங்குகிறார். ராகுலின் இந்த பயணத்துக்கு "ராகுலின் தமிழ் வணக்கம்" என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பரப்புரை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். ராகுலின் தமிழ் வணக்கம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த சுற்றுப்பயணத்தின்போது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ராகுல் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல் காந்தி, நண்பகல் 11 மணி அளவில் கோவை வந்தடைகிறார். பின்னர் சிறு, குறு தொழில்முனைவோருடன் சுகுணா அரங்கில் மதிய உணவுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர், மாலை 3.30 மண அளவில் திருப்பூர் சென்றடையும் ராகுல் காந்தி 4 மணி அளவில் திருப்பூர் அனுப்பார்பாளையம் செல்கிறார். அங்கிருந்து மாலை 5 மணி அளவில் கொடிகாத்த திருப்பூர் குமரனின் நினைவிடம் சென்று மலரஞ்சலி செலுத்துகிறார். மாலை 5.45 மணிக்கு ராமசாமி முத்தம்மாள் திருமண மாளிகையில் தொழில்துறையினருடன் கலந்துரையாடிய பின், அன்றிரவு திருப்பூரில் உள்ள பொதுப்பணித்துறையின் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் காலை ஈரோடு செல்லும் ராகுல் காந்தி அம்மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து 25 ஆம் தேதி கரூர் மற்றும் திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதன் பின் தனது மூன்று நாள் சுற்றப்பயணத்தை முடித்துக் கொண்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

