மூத்த காங்கிரஸ் தலைவரும் கேரள வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ என்ற பெயரில் நடைபயணத்தை முதல்கட்டமாக தமிழகத்தில் தொடங்கி ஜம்மு - காஷ்மீரில் நிறைவு செய்தார். இந்தப் பயணம் நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.
இந்த நிலையில், தமது 2வதுகட்ட 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா' என்ற யாத்திரையை, ராகுல் காந்தி இன்று (ஜன.14) மணிப்பூரில் தொடங்கினார். மணிப்பூரில் உள்ள தெளபல் மாவட்ட மைதானத்தில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் அக்கட்சியின் முன்னணித் தலைவா்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “லட்சக்கணக்கான மக்கள் இங்கே இழப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி இங்கே வந்து உங்களது கண்ணீரைத் துடைக்கவில்லை. நரேந்திர மோடி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதி என்று கருதியிருக்கமாட்டார்கள். உங்கள் வலியை அவர்களுடைய வலியாக உணரவில்லை. மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் புரிந்துள்ளோம். உங்களது சோகமும், வலிகளும் எங்களுக்குப் புரியும். மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியைத் திரும்பக் கொண்டுவருவோம்” என்றார்.
ராகுல் காந்தியின் இந்த பேருந்து மற்றும் நடைப்பயண யாத்திரையானது 14 மாநிலங்களின் 110 மாவட்டங்கள் வழியாக 66 நாட்களில் 6,700 கிலோமீட்டருக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 100 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கும். இந்த யாத்திரை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி, மார்ச் 20ஆம் தேதி மகாராஷ்டிராவில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.