ராகுல் காந்தியின் லண்டன் பேச்சை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக எம்பிக்கள்!

ராகுல் காந்தியின் லண்டன் பேச்சை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக எம்பிக்கள்!
ராகுல் காந்தியின் லண்டன் பேச்சை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக எம்பிக்கள்!

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

நாடளுமன்றமும்.. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சும்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் 2வது அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியவுடன் மக்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் உரையாற்றினார். அதில் சமீபத்தில் ராகுல் காந்தி 10 நாள் லண்டன் பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இதர பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது இந்திய ஜனநாயகம் குறித்தும், மத்திய அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து உரையாற்றியிருந்தார்

குறிப்பாக, இந்தியாவை அவமதிக்கக் கூடிய நோக்கில் ராகுல் காந்தியின் உரை இருந்ததாகவும், "இந்தியா" என்பது ஒட்டுமொத்த மக்களுக்குமானது என்பதால் ராகுல்காந்தியின் பேச்சை அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும் என்றார். மேலும், ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 இதுஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் அதானி விவகாரத்தில் "We Want Justice" என முழக்கம் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

என்னக் குற்றச்சாட்டை பாஜகவினர் வைக்கிறார்கள்?

சமீபத்தில் லண்டன் பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்க மறுக்கப்படுகிறது என பேசியதாகவும், மதிப்புமிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையை அவமதிக்கக் கூடிய நோக்கில் ராகுல் காந்தியின் பேச்சு இடம்பெற்றதை கண்டிக்கும் வகையில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கூட்டாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், ராகுல் காந்தி மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

லண்டனில் என்ன பேசினார் ராகுல் காந்தி?

 லண்டன் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மத்திய பாஜக அரசை விமர்சித்து பேசியிருந்தார். ராகுல் காந்தி தன்னுடைய பேச்சில், “பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் என் தொலைபேசி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மட்டுமன்றி எதிர்க்கட்சியினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இந்தியாவில் பொதுத்துறைகள் சுதந்திரமாக செயல்பட வில்லை" என்று மத்திய அரசை விமர்சித்துப் பேசியிருந்தார். 

விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார்கள் - ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் அசாத், விசாரணை அமைப்புகளை தவறாக மத்திய அரசு பயன்படுத்துவதை பற்றி விவாதிக்க வேண்டும் என கடிதம் வழங்கியுள்ளார். அவர் வழங்கிய கடிதத்தில், "எதிர்க்கட்சித் தலைவர்களை சட்ட விரோதமாக கைது செய்வதன் மூலம் மத்திய அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளை மிக மோசமாக பயன்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயக அமைப்பை கடுமையாக பாதிக்கிறது. தற்போது நாட்டில் பாஜக அல்லாத அரசு செயல்பட அனுமதிக்கப்படவில்லை. சில சமயங்களில் ED மூலமாகவும், சில சமயம் CBI மூலமாகவும் பொய் வழக்குகளைப் பதிவு செய்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

மேலும், அவர்களின் பொது சேவை பணிகள் தடைப்படுகின்றன. எந்த ஆதாரமும் இல்லாமல், மாநில அரசுகளின் அமைச்சர்களைக் கூட விசாரணை அமைப்புகள் கைது செய்கின்றன. விசாரணைக்காக யாரையும் கைது செய்வது இந்திய சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது. டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா டெல்லியில் கல்விப் புரட்சியைக் கொண்டு வந்து டெல்லி மாடலை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வந்துள்ளார்

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எவ்வித ஆதாரமும் இன்றி அவரை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த 9 ஆண்டுகளில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், பிற எதிர்க்கட்சிகளின் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற பொது ஊழியர்களுக்கு எதிராகவும் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ஜனநாயக மரபுகளுக்கு எதிரானதுடன், பொதுமக்களின் குரலை அகற்றும் நெறிமுறையற்ற மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான முயற்சியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com