மகாராஷ்டிரா | 18 வயது வந்த மக்களைவிட வாக்காளர் எண்ணிக்கை அதிகமானது எப்படி? - ராகுல் எழுப்பிய கேள்வி
மஹாராஷ்ட்ராவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகையைவிட வாக்காளர் எண்ணிக்கை எப்படி அதிகமாக இருக்க முடியும் என மக்களவ எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மஹாராஷ்ட்ரா தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு எம்பி சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு எம்பி சஞ்சய் ராவத்துடன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, மஹாராஷ்ட்ராவில் உள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை, ஒட்டுமொத்தமான வாக்காளர் எண்ணிக்கையை விட ஏன் அதிகமாக உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
அரசின் தகவலின்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 54 லட்சமாக உள்ளது என்றும், தேர்தல் ஆணையத்தின்படி, வாக்காளர்கள் எண்ணிக்கை அதைவிட அதிகமாக 9.7 கோடியாக உள்ளது என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி பெறப்போவதை அறிந்து அதனை மறைக்கும்விதமாக ராகுல்காந்தி இத்தகைய திசைத்திருப்பலில் ஈடுபடுவதாக மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிலடி அளித்திருக்கிறார். மஹாராஷ்ட்ராவில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே பதில் அளித்துவிட்டதாகவும் ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.