சொன்னதை செய்த ராகுல் காந்தி - நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த சகோதரிகளுக்கு உதவி
கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த பலத்த மழையினால் காவலப்பாரா மலை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவினால் 59க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் தங்களது உற்றார், உறவினர், உடமை என அனைத்தையும் இழந்து நின்றனர் சகோதரிகளான காவியா மற்றும் கார்திகா.
இருவரும் வெளியூரில் படித்ததால் அந்த விபத்திலிருந்து தப்பினர். அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி அவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தார்.
அதன்படி புதிய வீட்டை கட்டி அதன் சாவியை அவர்களிடம் நேற்று ஒப்படைத்தார்.
அதோடு தனது தொகுதியில் மூன்று நாள் பார்வையிடும் வகையில் நேற்று டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்து இறங்கினார் அவர்.
தொகுதியில் கொரோனா தொற்று நிலவரத்தை அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளதாக வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் கூட்டணி காட்சிகளாக செயல்பட்டு வந்தாலும் கேரள மாநில அரசியலில் இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.