"அனைத்தும் மக்களுடையது; ஆனால் பலன்?” | அதானி குழுமத்தில் LIC ரூ.5,000 கோடி முதலீடு.. ராகுல் கேள்வி
அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் கடந்த வாரம் உள்நாட்டுக் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்டியது. 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத இந்தக் கடன் பத்திரங்களை, எல்ஐசி நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கு ஆண்டுக்கு 7.75 சதவீதம் வட்டியை அதானி குழுமம் அளிக்க இருக்கிறது. மேலும், இந்தக் கடன் பத்திரங்கள் மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட இருக்கிறது என அதானி நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில், அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளதை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில், “பணம், காப்பீடு, அதற்கான பிரீமியம் தொகை அனைத்தும் மக்களுடையது. ஆனால், அதன்மூலம் கிடைக்கும் பலன், வசதி, பாதுகாப்பு அதானிக்குரியது. பொது மக்களிடம் இருந்து காப்பீடு என்ற பெயரில் எல்ஐசி வசூலிக்கும் பணம், பொதுப் பணமாகும். இதிலிருந்து பெரிய அளவிலான நிதியை எடுத்து ஒரே ஒரு தனியாா் நிறுவனமான அதானி குழுமத்தில் முதலீடு செய்வதை ஏற்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.