’’அமைதியான போராட்டம் அவமானம் அல்ல’’ - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்!
AI உச்சி மாநாட்டில் சட்டையின்றி போராட்டம் நடத்திய காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர்கள் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் . இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை காங்கிரஸ் கண்டிக்கிறது, இளைஞர் காங்கிரஸ் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தெரிய வருகிறது. அதையும் காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி AI உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் ‘சட்டை அணியாத’ போராட்டத்தை ‘நிர்வாண அரசியல்’ என்றும் சர்வதேச அரங்கை காங்கிரசின் அழுக்கு அரசியலுக்கு பயன்படுத்தினார்கள் என்றும் பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் வெட்கக்கேடான அரசியலை மேற்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டை விற்றுத் தள்ளிய இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் வெட்கக்கேடானது. எஃப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் அமைச்சர் பெயர் இடம்பெற்றதுதான் வெட்கக்கேடானது, அமைதியான போராட்டங்கள் அல்ல என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், "மோடிஜி, நீங்கள் அவமானத்தைப் பற்றிப் பேசுகிறீர்களா? அவமானம் என்றால் என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எப்ஸ்டீன் கோப்புகளில் உங்களது பெயர், உங்கள் அமைச்சர் மற்றும் உங்கள் நண்பரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. உங்களது பெயர்கள் ஒரு மோசமான குற்றவாளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதான் அவமானகரமான விஷயம். நீங்கள் அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தம், அதில் நீங்கள் நாட்டையே விற்றுவிட்டீர்கள், இது வெட்கக்கேடானது. அமெரிக்காவுடனான ஒப்பந்தம் தேசிய நலன்களுக்கு துரோகம் இழைக்கிறது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், "அமெரிக்காவுடன் நீங்கள் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தம், அதன்மூலம் நீங்கள் நாட்டை விற்றது வெட்கக்கேடானது" என்று அவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம், இந்தியாவின் தரவு பாதுகாப்பைச் சமரசம் செய்தது மட்டுமில்லாமல் விவசாயிகளையும் ஜவுளித் துறையையும் மோசமாக பாதித்ததாக ராகுல் காந்தி கூறியிருந்தார் .

