இந்திரா காந்தியின் தைரியம் இருக்குமானால்... மோடிக்கு சவால் விடுத்த ராகுல் காந்தி!
மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மீதான விவாதத்தின்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தானிடம் முன்கூட்டியே கூறியது ஏன் என கேள்வி எழுப்பினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஒரு நாடு கூட பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தானை உலகம் ஒரே மாதிரியாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை தானே நிறுத்தியதாக ட்ரம்ப் கூறிவருவதை குறிப்பிட்ட ராகுல் காந்தி, இந்திரா காந்தியின் தைரியம் 50 சதவீதமாவது இருக்குமானால், ட்ரம்ப் ஒரு பொய்யர் என பிரதமர் மோடியால் கூற முடியுமா என சவால் விடுத்தார். பாகிஸ்தானையும் சீனாவையும் பிரிக்கும் அளவுக்கு நம் வெளியுறவுக் கொள்கை இல்லை என குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, ஒரு இக்கட்டான சூழலை எப்படி கையாள்வது என்று தெரியாத நிலையில் மத்திய அரசு உள்ளதாக விமர்சித்துள்ளார்.