தமிழகத்திலும் முறைகேடு|டெல்லியிலிருந்து தமிழக வாக்காளர்கள் நீக்கம்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வாக்கு திருட்டு விவகாரத்தில் தமிழகத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்மையில் சுமத்தினார்.
மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், கர்நாடக பேரவைத் தேர்தலிலும் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக அவர் குற்றஞ்சாட்டினார். இயந்திரம் மூலம் படிக்கக் கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சில தரவுகளுடன் முன்வைத்த ராகுல் காந்தி, பாஜகவுக்காக தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபட்டது என்ற அணுகுண்டையும் தூக்கிப் போட்டார்.
தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி தனது Voter Adhikar Yatra நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, "வாக்கு திருட்டு" பற்றி விரைவில் ஒரு "ஹைட்ரஜன் குண்டை" வெளியிடப்போவதாகவும், அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு முகம் காட்ட முடியாது என்றும் கூறியிருந்தார்.
அதன்படி சொன்னபடியே இன்று ஹைட்ரஜன் குண்டு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, வாக்கு திருட்டு விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகளை தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு..
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்குகள் நீக்கப்பட்டதாக அவர் ஆதாரத்துடன் கூறினார். யாரோ வேண்டுமென்றே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், ஜனநாயகத்தை அழிப்பவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பதாகவும் வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் கட்சியின் வாய்ப்புகளைப் பலவீனப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை அழிப்பவர்களைக் காப்பாற்றுகிறது எனத் தெரிவித்த அவர், 100 சதவீத உண்மை மற்றும் ஆதாரத்தின் ஆதரவு இல்லாமல் எந்த அறிக்கையையும் வெளியிட மாட்டேன் என்றார்.
மேலும், டெல்லியில் அமர்ந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் அழிக்கப்படுகிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். அதேபோல் பல மாநிலங்களை சேர்ந்த நபர்கள் வேண்டுமென்றே கர்நாடக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள் என்றும் ராகுல் குற்றஞ்சாட்டினார்.