காங்கிரஸ் குறித்து விமர்சித்தும், பிரதமர் மோடியைப் புகழ்ந்தும் சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.
கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் பாஜக மீது தொடர்ச்சியாக சிவசேனா கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தது. ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா நிச்சயம் வெளியேறிவிடும் என்று கூட பேசப்பட்டது. சமீபத்தில் கூட டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட தர்ணா போராட்டத்தில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுட் திடீரென கலந்து கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆனால் மக்களவை தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் பாஜக சிவசேனா இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கின. மக்களவை தேர்தலில் மகாராஷ்ட்ராவில் இணைந்து போட்டியிட பாஜக, சிவசேனாவும் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்தார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உடன் பாஜக தலைவர் அமித்ஷா மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது இரு கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதில், பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தலைமைக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகிய இருவரும் நிகரானவர்கள் அல்ல என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தியின் வளர்ச்சிப் பாதை மேம்பட்டு இருந்தாலும், மோடியின் தலைமைப் பண்புக்கு இணையாகாது என அக்கட்சி விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் குறித்து விமர்சித்தும், பிரதமர் மோடியைப் புகழ்ந்தும் சிவசேனாவின் கருத்து வெளியாகியுள்ளது.