‘இந்திய பொருளாதாரத்தின் தேக்க நிலை கவலை தருகிறது’ - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்

‘இந்திய பொருளாதாரத்தின் தேக்க நிலை கவலை தருகிறது’ - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
‘இந்திய பொருளாதாரத்தின் தேக்க நிலை கவலை தருகிறது’ - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்

இந்திய பொருளாதாரத்தில் நிலவி வரும் தேக்க நிலை மிகவும் கவலை தரும் விதமாக இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 

இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் இந்தியாவில் பல துறைகளின் உற்பத்தி குறைந்து காணப்படுகிறது. அத்துடன் தனியார் முதலீடுகளும் இந்தியாவில் குறைந்துள்ளது. மேலும் மத்திய அரசிடமும் முதலீடுகள் செய்ய போதிய நிதி ஆதாரம் இல்லை. அதேபோல போதிய வேலை வாய்ப்புகளும் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.8 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து பல தனியார் நிறுவனங்கள் கணித்துள்ளன. அவற்றின் கணிப்பு மத்திய அரசின் கணிப்பைவிட மிகவும் குறைவாக உள்ளது. எனினும் என்னை பொறுத்தவரை இந்திய பொருளாதாரத்தில் தற்போது நிலவி வரும் தேக்க நிலையே மிகவும் கவலை தருகிறது. 

ஏனென்றால் பல்வேறு தொழில்களின் வளர்ச்சியில் தற்போது மந்தநிலை நீடிக்கிறது. அவை அனைத்தையும் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல ஒரு முக்கியமான சீர்த்திருத்தம் தேவைப்படுகிறது. அதாவது தற்போது நாம் எந்தவகையான இந்தியாவை உருவாக்க நினைக்கிறோமோ அதற்கு ஏற்ப பொருளாதாரத்தில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளவேண்டும். புதிய சீர்த்திருத்தங்களின்படி தனியார் முதலீட்டை அதிகரிக்கும் வாய்ப்பை உண்டாக்கவேண்டும். 

அத்துடன் அதற்கு ஏற்ப இந்த நிறுவனங்களுக்கு குறைந்த நாட்களுக்கான சலுகைகள் உள்ளிட்டவை அளிக்க திட்டமிட வேண்டும். இதுவே இந்திய தொழில்கள் மற்றும் இந்திய சந்தை ஆகியவை முன்னேற வழிவகுக்கும். மேலும் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியது போல இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகைப்படுத்தி காட்டப்படுகிறது. இதை நான் நீண்ட நாட்களாக கூறி வருகிறேன். 

ஆகவே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை கணிக்க ஏதுவாக புதிய முறையை கண்டறிய வேண்டும். தற்போது இருக்கும் தேக்கநிலையும் 2008ஆம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் மிகவும் வித்தாயாசமானவை. தற்போது இருப்பது சற்று மாறுபட்ட நிலையாகும்” எனத் தெரிவித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com